×

தேசவிரோத கருத்தை பரப்புவோர் ‘கொரோனா’ வைரஸ் போன்றவர்கள்… துணை ஜனாதிபதி கருத்து


குருஷேத்ரா: தேசவிரோத கருத்தை பரப்புவோர் ‘கொரோனா’ வைரஸ் போன்றவர்கள் ஆவார்கள் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கருத்து தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச கீதா மஹோத்சவ் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘சிலர் தேசவிரோத விஷயங்களைப் பரப்புவதில் மகிழ்ச்சியடைகின்றனர். இதுபோன்ற செயல்கள் கொரோனா வைரஸ் போன்றது என்பதால், மக்கள் அவர்களை எதிர்க்க வேண்டும். அவற்றை ஒழிக்க வேண்டும். இந்திய நாகரிகத்தின் அடித்தளம் எதுவென்றால், அதன் கலாசாரம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை, உலகளாவிய சகோதரத்துவத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை கூறமுடியும்.

அவைதான் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இன்றைய நிலையில் நாடு பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. வரும் 2047ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, ​​நாம் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ரஷ்யா – உக்ரைன் மோதல், இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆகியவை அதிக வலியை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. சிலர் தாங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுதான் அடிப்படை உண்மை.

இதை அடைய எளிதானது அல்ல என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அது கடினமான சவாலாக இருந்தது. சட்டத்தின்படி யாராவது நோட்டீஸ் பெற்றால், அவர்கள் சட்டத்தின்படி அதன் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு மாறாக சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டால், தெருவில் இறங்குவோம் என்ற புதிய கலாசாரம் ஏற்கக்தக்கதல்ல’ என்று கூறினார்.

The post தேசவிரோத கருத்தை பரப்புவோர் ‘கொரோனா’ வைரஸ் போன்றவர்கள்… துணை ஜனாதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Vice President ,Kurukshetra ,Jagdeep Tankar ,Dinakaran ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து